நிதி நிலை அறிக்கைக்கு தொழில்துறையினர் வரவேற்பு :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் 2021-2022-ம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ராஜா எம்.சண்முகம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்):கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில்திருப்பூரையும் இணைக்க வேண்டும்.

கூடுதலாக 2 பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைத்தல், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டமும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சிப்காட்டில் கட்டிடங்கள்கட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஈஸ்வரன் (தென்னிந்திய பனியன்உற்பத்தியாளர் சங்கம்-சைமா):திருப்பூர் நகருக்கு பெருநகர் வளர்ச்சி கழகம் அமைப்பது, டைடல் பார்க் அமைக்க ஏற்பாடு, தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் சென்னை, கோவையில் குடியிருப்புவசதி ஏற்படுத்துவதை வரவேற்கிறோம்.இதேபோல, திருப்பூரில் அமைத்தால்மகிழ்ச்சி அடைவோம். திறன் மேம்பாட்டுக்கு பயிற்சி நிலையம் அமைத்து,புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை வரவேற்கிறோம்.

குமார் துரைசாமி (ஏற்றுமதியாளர்): திருப்பூரில் டைடல் பார்க் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்னலாடை தொழிலுடன் சேர்ந்து புதிய தொழில்களை செயல்படுத்த ஏதுவாக அமையும். வேலை வாய்ப்புகளும் பெருகும். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்தது மகிழ்ச்சிஅளிக்கக்கூடியது. டீசல் விலையையும் குறைக்க வேண்டும்.

முத்துரத்தினம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா): ஜவுளித்தொழிலுக்குதேவையான நூல், துணி வகையில்கவனம் செலுத்துவோம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைத்தல், வீட்டு வசதி துறைக்கு ரூ.3 ஆயிரத்து 954 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம்.

சுப்பிரமணியம் (களஞ்சியம் விவசாயிகள் சங்கம்): நீர்ப்பாசனத்திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரத்து 607கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம். தள்ளுபடி செய்யப் பட்ட நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. கிராமப்புறங்களில் ஏற்கெனவேவிவசாய பண்ணை வேலைகளுக்குஆட்கள் கிடைக்காத நிலையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் வேலை நாட்களையும், கூலியையும் அதிகரிப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்துவது, விவசாயக் கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக் குறையை அதிகரிக்கும்.

கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்:

குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான கடன் உத்தரவாத திட்டம் ஏற்படுத்துதல், 15 இடங்களில் இளைஞர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்தல், கோவையில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் பிரபு தாமோதரன்:

தமிழக நிதிநிலை அறிக்கை உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் நாட்களில் பெரிய அளவில் வளர்ச்சி அடையக் கூடிய துறைகளை தேர்வு செய்து பெரிய அளவிலான உற்பத்தி மைய தொகுப்புகளை அமைப்பது நல்ல வளர்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைப்பது வரவேற்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்