அரசுப் பேருந்து மீது லாரி மோதி 6 பேர் காயம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பென்னா கரம் அடுத்த புதுப்பட்டிக்கு செல்லும் அரசு நகரப் பேருந்து (எண்:17) நேற்று மாலை பயணிகளுடன் பென்னாகரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

பேருந்தை ஓட்டுநர் சகாதேவன் ஓட்டிச் சென்றார். பென்னாகரம் சாலையில் கோதுமை மில் அருகே உள்ள, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழாக சென்றபோது சேலம் திசையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி சர்வீஸ் சாலையில் வந்த, மோட்டர்களுக்கான காயில் பாரம் ஏற்றி வந்த லாரி, அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் முன் படிக்கட்டு அருகே மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கண்ணன் (51), பயணிகள் பார்வதி (35), வசந்தா 40), பீரி (35), திருநாவுக்கரசு (40) உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காயம்பட்டவர்களை அப்பகு தியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியின் முன்பகுதி முழுமையாக நொறுங்கி சேதமானது. விபத்து நடந்ததும் லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர்படுத்தினர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்