புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வார்டு வாரியான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
கடந்த 10-ம் தேதி பட்டியல் இனத்தவர், பட்டியல் இன பெண்கள் மற்றும் பெண்கள் (பொது) ஆகிய இடஒதுக்கீடு அடங்கிய விவரங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் பழங்குடி யின இனத்தவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டது.
புதுச்சேரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 11 வார்டுகளும், உழவர்கரை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 14 வார்டுகளும், காரைக்காலில் உள்ள 17 வார்டுகளில் 5 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாஹே மற்றும் ஏனாம் நகராட்சிகளுக்கும், கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் ஓபிசி பிரிவினருக்கான வார்டுகள் தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக, பட்டியலினத்தவருக்கு குலுக்கல் முறையில் வார்டுகள் தேர்வு செய்யப்பட்டது.
அப்போது பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், புதுச்சேரியில் 9 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வார்டு எனவும்,மாஹே, ஏனாமில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு ஒரு வார்டு என பிரிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் எனக்கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், பட்டியலினத்தவர் அதிகம் வசிக்காத பகுதிகள் தனி வார்டாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவற்றை மாற்றி அமைத்த பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
“உள்ளாட்சித் துறை மூலம் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அறிவிக் கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் குலுக்கல் முறையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக புகார்களை மனுவாக அளித்தால், அதனை பரிசீலிக்கிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் - பாஜக நிர்வாகிகள் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago