கிருஷ்ணகிரி அருகே ஜல்லிகற்கள் சிதறி, தூசி பறக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் அவதியுடன் சென்று வரும் அவல நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கிருஷ்ண கிரியில் இருந்து மத்தூர் வரை செல்லும் சாலையில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் மிகவும் தொய்வாகவும், சாலை அமைக்க போட்டப்பட்ட ஜல்லிகற்கள் சிதறி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த மகேந்திரன் கூறும்போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கினர். இதற்காக சாலையின் ஒருபுறம் ஜல்லிக்கற்கள், மண் உள்ளிட்டவை கொட்டப்பட்டது. இப்பணிகள் விரைந்து முடிக்காததால், தற்போது சாலை முழுவதும் ஜல்லிகற்கள் சிதறி உள்ளன.இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலையில் பயணிக்க முடியாத நிலை தான் உள்ளது. மேலும், இச்சாலையில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் முடிக்காததால், வாகனங்கள் மண் சாலையில் இறங்கி செல்வதால் தூசி அதிகளவில் பறக்கிறது. அப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து, தொய்வின்றி முடிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago