தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தாதனூரைச் சேர்ந்தவர் அரசு (48). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் தருமபுரியில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் அவர் நடத்துநராக பணியில் இருந்தார். பேருந்தை ஓட்டுநர் பரமசிவம் ஓட்டிச் சென்றார். அன்று இரவு தருமபுரியில் இருந்து கிளம்பிய பேருந்து மொரப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்க நின்றது. பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த நிலையில் நடத்துநர் அரசு, பயணி ஒருவருக்கு சில்லரை தொகை தர தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, பையில் இருந்த 5 நூறு ரூபாய் தாள்கள் மாயமாகி இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் நடத்துநர் பேருந்துக்குள் தேடியபோது இளைஞர் ஒருவர் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கி ஓட முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் அவரைப் பிடித்து விசாரித்தபோது நடத்துநரிடம் பணம் திருடியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவரை மொரப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நடத்துநர் அரசு அவர் மீது புகார் அளித்தார். அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்ததில், அவர் அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அறிவுமணி (36) எனத் தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago