கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் - ஈரோட்டில் மும்மத வழிபாட்டுத்தலங்களிலும் கட்டுப்பாடு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்மத வழிபாட்டுத்தலங்களிலும், நாளை வரை வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களில் நேற்று முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி வெள்ளியான நேற்று ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், உள்ளிட்ட கோயில்கள், காளை மாட்டுச்சிலை அருகில் உள்ள பள்ளி வாசல், பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டது. நாளை (15-ம் தேதி) வரை, கோயில், சர்ச், மசூதி என மும்மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டு இருக்கும் என வழிபாட்டு தலங்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாக பஞ்சமி வழிபாடு

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் உள்ள சுயம்பு நாகர் ஆலயத்தில், நாக பஞ்சமியையொட்டிநேற்று காலை விக்னேஷ்வர பூஜையும், சிறப்பு யாகமும், புஷ்பாஞ்சலி பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோயிலில் சமூக இடைவெளியை பின் பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் வெளியில் உள்ள அரச மரத்தடியில் உள்ள நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் கோயிலில் நடந்த கருட பஞ்சமி விழாவில், கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் பட்டாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்