சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் வியாபாரிகள் மறியல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஜெயராஜ் சாலை ஸ்மார்ட்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு அப்பகுதியில் உள்ள தனியார் காய்கறி மார்க்கெட்டின் உள்ளே வாகனங்கள் செல்வதற்கான பாதை உள்ளது.

இந்தப் பாதையின் அருகே சாலையில் தடுப்புச்சுவர் அமைத் தால் வாகனங்கள் மார்க்கெட்டின் உள்ளே திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, தடுப்புச்சுவர் அமைக்க கூடாது என்றுமார்க்கெட் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று குறிப்பிட்ட பகுதியில் சாலையின்நடுவே தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் பாளையங்கோட்டை பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர்அங்கு வந்து போராட்டம் நடத்திய வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பேரில் சாலை மறியலை வியாபாரிகள் கைவிட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் சாருயை சந்தித்து கோரிக் கையை வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்