கரூரில் அமைக்கப்பட்டுள்ள - உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது :

தமிழகத்தில் கிராமங்களில் உள்ள கோயில்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள விலை மதிப்பற்ற சாமி சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக தமிழகத்தில் 34 இடங்களில் சிசிடிவி, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங் கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, கரூர் காளியப்பனூரில் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.90 ஏக்கரில் ரூ.95 லட்சம் மதிப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் 2017-ல் கட்டப்பட்டது.

தமிழகத்தில் கட்டப்பட்ட 34 உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் முதற்கட்டமாக 23 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், கரூர் உள்ளிட்ட 11 இடங்களில் மையங்கள் திறக்கப்பட்டபோதும், சிலைகளை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

சிலைகளை இடம் மாற்றுவதற்கு பதிலாக, கோயில்கள் உள்ள ஊரிலேயே ஸ்ட்ராங் ரூம் அமைத்து சிலைகளை பாதுகாக்கவேண்டும் என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது.

இதனால், கரூரில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையம் பயன்பாட்டுக்கு வராமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடந்தது. தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து, கரூர் உள்ளிட்ட 11 உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, இந்து சமய அறநிலையத் துறை மூலம் பகல், இரவு நேர காவலர்கள், எழுத்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கிராமக் கோயில்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சுமார் 250 சிலைகள், தற்போது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி, குளித்தலை கடம்பனேஸ்வரர், அய்யர் மலை ரெத்தினகிரீஸ்வரர் மற்றும் சிவாயம், தேவர்மலை ஆகிய கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள் விரைவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு மாற்றப்பட உள்ளன.

இதுகுறித்து இந்துசமய அற நிலையத் துறை கரூர் உதவி ஆணையர் எம்.சூரியநாராயண ிடம் கேட்டபோது, ‘‘அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு வந்தவுடன் பிற கோயில் சுவாமி சிலைகள் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு மாற்றப்படும்’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE