பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரைப்பட இயக்குநர் கவுதமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
சுங்கச் சாவடி மூலம் கட்டணம் வசூலிப்பது நவீன கொள்ளை. தமிழகத்தில் ஏற்கெனவே 52 சுங்கச் சாவடிகள் உள்ள நிலையில், 53 -வதாக பேரளி சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும். பேரளி சுங்கச் சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையெனில் அதை அகற்றும் வேலையை நாங்கள் செய்ய வேண்டியநிலை உருவாகும்.
கேரளாவில் 1,700 கி.மீ நெடுஞ்சாலையில் 3 சுங்கச் சாவடிகளும், மகாராஷ்டிராவில் 15,500 கி.மீ நெடுஞ்சாலையில் 44 சுங்கச் சாவடிகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் 5,400 கி.மீ நெடுஞ்சாலையில் 52 சுங்கச் சாவடிகள் எதற்கு அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிதி பற்றாக்குறைக்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்தான் காரணம். கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்துவது அநியாயம்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநில உரிமைக்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் தமிழருக்கே வேலை என சட்டம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago