அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் : அரியலூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் அதிகளவிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், காணொலி மூலம் அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.செங்கமுத்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அம்பேத்கர் வழியன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு அதிகளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் வேகத்தை கவனித்து, அதிகவேகத்தில் செல்லும் லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

செந்துறையை மையமாக கொண்டு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் வரத்து வாய்க்கால்களை தூர் வார வேண்டும். 2 ஆண்டுகளாக மாட்டு கொட்டகைகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு உடனடியாக கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. அடுத்து நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களையும் அழைக்க வேண்டும்.

மேலராமநல்லூர் கிராமத்துக்கு பேருந்து இயக்க வேண்டும். கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

மருதையாறில் செல்லும் உபரி தண்ணீரை அருகே உள்ள காலாவதியான சுரங்கங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள சேதமடைந்த பாசன மதகுகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், பேசிய ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்