ஊருக்குள் திரும்பிய ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது? : தமிழக அரசு இன்று பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

அடர்ந்த வனப்பகுதியை விட்டு மீண்டும் ஊருக்குள் திரும்பிய ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து தமிழக அரசு இன்று பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டுவந்த ரிவால்டோ யானைக்கு, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் ரிவால்டோ யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கே திரும்பி வந்து விட்டது.அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக்கோரியும் விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “அனாதையாக சுற்றி வந்த ரிவால்டோ யானை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் நெருங்கிப்பழகி விட்டதால், அடர்ந்த வனப்பகுதியில் 25 கிமீ தூரத்தில் விட்டும்கூட மறுநாளே திரும்பிவந்து விட்டது. அந்த யானையை மீண்டும் வனப்பகுதியில் விட்டால் அதன் உயிருக்கே ஆபத்தாகி விடும். ஏற்கெனவே ஒரு காட்டு யானையைப் பார்த்து ரிவால்டோ யானை மிரண்டு ஓட்டம் பிடித்துள்ளது. எனவே, அந்த யானையைஎம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ரிவால்டோ யானையை மீண்டும்வனப்பகுதிக்கு அனுப்பினால் அது ஊருக்குள் திரும்பி விடும். மேலும், காட்டு யானைகள் அல்லது மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், “தற்போதைய சூழலில் அந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தக்கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதை எம்.ஆர்.பாளையம் முகாமுக்கு கொண்டு வர இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து தமிழக அரசு இன்று (ஆக.13) விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்