சின்னதக்கேப்பள்ளி கிராமத்தில் நேற்று நாக சதுர்த்தி விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள சின்னதக்கேப்பள்ளி நாகம்மன் கோயிலில், நாக சதுர்த்தியை முன்னிட்டு 13-ம் ஆண்டு பாலாபிஷேக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 4 மணிக்கு கங்கை பூஜை, கணபதி பூஜை, நவகிரக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, பூர்ண கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நாகம்மாதேவி நாம ஹோமம், காயத்திரி ஹோமம், பூர்ணாஹுதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
காலை 8 மணிக்கு பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாகச் சென்று நாகம்மா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். பால் குட ஊர்வலத்தில், காவடியாட்டம், மாடு, மயில் ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் பெண்கள் அம்மன் வேடம் அணிந்து கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அனைவருக்கும் அன்னதானமும், வாண வேடிக்கையும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஓம்சக்தி பக்தர்கள், ஊர் பொதுமக்கள், சின்னதக்கேப்பள்ளி, பெரிய தக்கேப்பள்ளி, பழைய ஊர், மாளகுப்பம், கரடிகுறி, கள்ளகுறி, பூசாரிப்பட்டி, போத்திநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago