கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுரை :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

மயானம் பாதை ஆக்கிரமிப்பு குறித்து தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மக்கள் வசிக்கும் கிராம பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும்.வளைவான பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்த வேண்டும். சாலையின் நடுவே இரும்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

மேலும், மழை, புயல் ஏற்படும்போது தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய் துறை அவசரகால மேலாண்மை திட்டம் மற்றும் நிலையான செயல் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

இதேபோல், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை கண்டறிய வேண்டும். மேலும், சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தல், விற்பனையில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்று விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ, சதீஸ், ஏடிஎஸ்பி அன்பு, ஓசூர் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE