ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய மதுரை வீராங்கனைக்கு பாராட்டு விழா :

By செய்திப்பிரிவு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் மாணவி ரேவதி. தடகள வீராங்கனையான இவர், மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர். இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சமீபத்தில் பங்கேற்று திரும்பினார்.

அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கிறிஸ்டியானாசிங் தலைமை வகித்தார். துணை முதல்வர் பியூலா ஜெய வரவேற்றார். ரேவதிக்கும், அவரது பயிற்சியாளர் கண்ணனுக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: பெற்றோரை இழந்த ரேவதி, அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும், அவர் மீண்டும் சாதனைபுரிய பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பேசும்போது, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், விடா முயற்சி, கடின உழைப்பால் ரேவதி சாதித்துள்ளார். அவர் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், திருச்சி காவல்துறை கூடுதல் துணை ஆணையர் வனிதா, உடற்கல்வித் துறை இயக்குநர் செங்கதிர், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சாந்த மீனா, ரேவதியின் பாட்டி ஆரம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்