பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறினால் 24 மணி நேரமும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்தார்.
மதுரை நகரின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க முல்லைபெரியாறு லோயர் கேம்பிலிருந்து 125 எம்.எல்.டி குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மதுரை நகரில் உள்ள பழைய 57 வார்டுகளில் குடியிருப்புகளுக்கு 110 மி.மீ. முதல் 450 மி.மீ. விட்டமுள்ள பகிர்மான குழாய்கள் 813.48 கி.மீ.தூரம் பதித்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
ரூ.325 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி பெற அனுப்பப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.
இத்திட்டத்துக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் பேசியதாவது:
57 வார்டுகளில் ரூ.325 கோடியிலான இத்திட்டம் நிறைவடைவதற்கு 36 மாதங்கள் ஆகும். சாலைகளைத் தோண்டுவதால் சில பிரச்சினைகள் வரும். ஒரு நல்ல திட்டத்துக்காகப் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மதுரை நகர மக்களுக்கு 24 மணிநேரமும் சுதாரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். குடிநீர் விநியோகம் செய்யும் பணி உறுதியாக தனியாருக்கு விடப்படாது. மாநகராட்சியே ஏற்று நடத்தும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தைக் கண்காணிக்க ஒரு மையக் கண்காணிப்பு அலுவலகம் ஏற்படுத்தப்படும். ஒரு வார்டில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால் அருகில் உள்ள வார்டின் குழாய்களை இணைத்து குடிநீர் தடைப்படாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, பதவியேற்புக்குப் பின் குடிநீர் குழாய் பதிப்பைத் தொடங்கலாம் என்கிறார்கள். ஆனால், அதுவரை பொறுத்திருந்தால் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு இடத்துக்குச் சென்றுவிடும். அதனால், உடனடியாக தொடங்குவதே நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago