இளைஞர்கள் நூலகங்களைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் : தருமபுரி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

இளைஞர்கள், இளம்பெண்கள் நூலகங்களைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

வாசகர்களின் வருகையை அதிகரிக்க முனைப்புக்காட்ட வேண்டும். அதற்கு நூலகர்கள் வாசிப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு வாசகர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். வாசகர்களின் மன ஓட்டத்துக்கு தேவையான நூல்கள் நூலகத்தில் இருந்தால் அதனை வாசிக்க பரிந்துரைக்க வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நூலகம் வருவதற்கு தேவையான உத்திகள் புதிய அணுகு முறைகளை நூலகர்கள் கையாள வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார். அப்போது, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நூலகங்களை பயன்படுத்திக் கொண்டு இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில் மாற்று ஏற்பாடாக பிற பணிகளிலும் பணியாற்றும் வகையில் ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றிக்கொண்டே போட்டித் தேர்விற்கு தயார் படுத்திக்கொள்ளும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக வரப்பெற்ற நூல்களை, மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 15 நூலகங்களுக்கு 14,066 புதிய நூல்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், ஆட்சியருக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 30 நூல்களையும் மாவட்ட மைய நூலக பயன்பாட்டிற்காக வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தி, வட்டாட்சியர் ராஜராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்