நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் மீன் குளம், பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் சிகார் கிராமத்தில், மீன் வளர்ப்பு மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் பரப்பில் ரூ.7 லட்சம் செலவில் மீன்வளர்ப்புக் குளம் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.3.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மற்றும், உள்ளீட்டு மானியமாக (மீன்குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவுகள்) ஹெக்டேர் ஒன்றுக்கு ஆகும் மொத்த செலவினமான ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இதேபோல, ஒரு ஹெக்டேர் பரப்பில் ரூ.6 லட்சம் செலவில் மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மற்றும் உள்ளீட்டு மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ஆகும் மொத்த செலவினமான ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் நாகப்பட்டினம்(தெற்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago