தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கணேசன் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் அந்தோணி பிரவீன் தாஸ் (33). இவரது வாட்ஸ் அப் எண்ணை கடந்த 30.03.2021 அன்று 'புரோபைல் மேக்கர்' என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துள்ளனர். இவர், அந்த குழுவின் நிர்வாகிகளான ரூபா மற்றும்ரஞ்சனி ஆகியோரை தொடர்பு கொன்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது ரஞ்சனி 'ஆப்டிமஸ்மார்க்கெட்' என்ற தனியார் நிறுவனத்தை தான் வைத்திருப்பதாகவும், இந்த நிறுவனத்தில் உள்ள ஒருதிட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் வாரம் தோறும் உங்களுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கும் எனவும், இத்திட்டத்தில் விலகும் போது முதலீடு செய்த முன்பணம் ரூ.50 ஆயிரத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
எஸ்பியிடம் புகார்
இதனை நம்பி அந்தோணி பிரவீன் தாஸ் கடந்த 29.04.2021 அன்று தனது வங்கி கணக்கில் இருந்து ரஞ்சனி அளித்த வங்கி கணக்குக்கு ரூ.2 லட்சத்தை மொபைல் வங்கி சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அவர் அனுப்பிய பணத்துக்கு எந்தமுதலீட்டுப் பத்திரமும் வரவில்லை,வாரம்தோறும் பணமும் வரவில்லை.இதுகுறித்து அந்தோணி பிரவீன் தாஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடி சைபர்குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவனுக்கு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், மோசடி செய்த பணம் பெங்களூருவில் உள்ள கிரண்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
கிரண்குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு பணம் வந்ததை ஒத்துக் கொண்டு, ரூ.2 லட்சத்தை அந்தோணி பிரவீன் தாஸ் வங்கி கணக்குக்கு நேற்று முன்தினம் அவர் திருப்பி அனுப்பிவிட்டார். இதுகுறித்து போலீஸார்தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தைமீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சைபர் குற்றப் பிரிவு போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் வரும்ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். சைபர் குற்றங்கள் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்பட்டால் உடடியாக கட்டணமில்லா தொலைபேசி எண் 155260-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago