தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்ட பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாவட்டத்தில் இதுவரை 18 சதவீதம் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 4.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் சற்றுஅதிகரித்து காணப்பட்டது. தற்போது மூன்றாவது அலை நெருங்கி வருகிறது.
கரோனா தொற்று உருமாறும் வைரஸ் என்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இறப்பு விகிதம் அதிகமாக இருக்கக் கூடும்என்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வாரத்தில் சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள், உடன்குடி மற்றும் விளாத்திகுளம் வட்டார மருத்துவ அலுவலர்கள், கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விமான நிலையம், சித்த மருத்துவத் துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆகியவற்றுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
மேலும், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளான கச்சனாவிளை, உமரிக்காடு, திருப்பணிசெட்டிகுளம், செட்டியாபத்து, மணப்பாடு, முதலூர், வரதம்பட்டி, குலசேகரபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சித் தலைவர்களை பாராட்டும் விதமாக கேடயம் மற்றும்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.நேரு, இணைஇயக்குநர் நலப் பணிகள் முருகவேல், துணை இயக்குநர்கள் அனிதா, போஸ்கோராஜா, மாவட்டசித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago