வந்தவாசி அருகே ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் - பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

வந்தவாசியில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்ப்புத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்தவர் சார்பில், ஏரியில் மீன் வளர்க்கப்படுகிறது.

இந்நிலையில், மீன் பிடிப் பதற்காக, ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுப் பணித்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, “மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். பெரும் பகுதியான தண்ணீர் வெளியேற்றப் பட்டுள்ளதால், ஏரியை ஒட்டிய விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நாசமாகிவிட்டன.

மேலும் அடுத்த போகத்துக்கான தண்ணீரும் வீணாகிவிட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் டி.பாபு உறுதியளித்தார்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்