நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அணைமேடு பகுதியில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு அணைமேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என தனிநபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று அளவீடு செய்ய வருவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது ‘‘கடந்த 2010-ம் ஆண்டில் மின்வசதி கேட்டுவிண்ணப்பித்தபோது, 40 ஆண்டுகளுக்குமேல் வசித்து வருவதால் மின் இணைப்பு வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அப்போதைய கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை வருவாய்த் துறை அதிகாரிகள் மறைத்துள்ளனர். ஆகவே, நாங்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா பெற்றுத்தர வேண்டும்’’ என்றனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக அங்கு வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு சென்றார்.
கோட்டாட்சியர் ப.ஜெகநாதன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், திருப்பூர் வடக்கு போலீஸார் மற்றும் மாநகர ஆயுதப்படை போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் அளவீடு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக, வருவாய்த் துறையினர் கூறும்போது ‘‘நீதிமன்றஉத்தரவுப்படி நிலத்தை அளக்கச்சென்றோம். பொதுமக்களின் எதிர்ப்பால், சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கருத்தில்கொண்டு, தற்காலிகமாக அளவீடு பணியை கைவிட்டுள்ளோம்’’ என்றனர்.திருப்பூர் அணைமேடு பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago