பழங்குடியினருக்கான தொலைபேசி சேவை பழுது : அமைச்சரின் முயற்சியால் சீரமைப்பு

By செய்திப்பிரிவு

பழங்குடியின மக்களின் உதவிக்காக தொடங்கி வைக்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி சேவை நேற்று திடீரென முடங்கியது. அமைச்சரின் முயற்சியால் சில மணி நேரத்தில் மீண்டும் சேவை தொடங்கியது.

தாராபுரத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் இணைய வழியில் நடைபெற்ற சர்வதேச பழங்குடியின தினவிழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி சேவையை (18004251576) தொடங்கி வைத்தார். உடுமலை, அமராவதிபகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் இணைப்பு கிடைக்க வில்லை, அந்த எண் பழுதானதாக தானியங்கி தகவல் அறிவிப்பு வந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர் கயல்விழிசெல்வராஜின் முயற்சியால் மீண்டும் கட்டணமில்லா தொலைபேசி சேவை கிடைக்கப்பெற்றது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அமைச்சர்கூறும்போது ‘‘உடுமலை, அமராவதிபகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் கேபிள் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதற்கான பராமரிப்புப் பணி நடைபெற்றதால் சிறிது நேரம் இச்சேவை முடங்கியது. தற்போது சேவை தொடங்கியுள்ளது.இச்சேவை தொடங்கிய 2 நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து 15 பேர் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்