தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை தொடர்பான உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சமூக தணிக்கை உயர்மட்ட குழுவால் 2016-17, 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் சமூக தணிக்கை செய்யப்பட்ட பத்திகளை நீக்கம் செய்ய காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, ஏரியூர், கடத்தூர் ஒன்றியங்களில் நிலுவையில் உள்ள 592 நிலுவைப் பத்திகளை முன்னிலைப்படுத்தி நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
தடை எழுப்பப்பட்ட தணிக்கை பத்திகள் மீது தனி கவனம் செலுத்தி ஆவணங்களை முன்னிலைப்படுத்தி தணிக்கைப் பத்திகளை நீக்கம் செய்ய ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பணித் தள பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்றும், சமூக தணிக்கை மேற்கொள்ளும்போது தணிக்கை விவரம் தெளிவாகவும், சுருக்கமாகவும் அறிக்கை வெளியிட சமூக தணிக்கைக் குழு மாவட்ட வள அலுவலர் மற்றும் வட்டார வள அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திநாதன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி திட்ட அலுவலர் மணிகண்டன், உதவி இயக்குநர் (தணிக்கை) முரளி கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago