விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வால் பெற்றோரை இழந்த 50 பேருக்கு மொத்தம் ரூ.1.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. அதன்படி கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்ச மும் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகள் 165 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக 50 பேருக்கு மொத்தம் ரூ.1.50 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் கூறியதாவது: இந்த நிவாரணத் தொகை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் வழங்கப்படும், பாதிக்கப்பட்ட குழந்தை 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு இப்பத்திரத்தை திருப்பிக்கொடுத்து வட்டியுடன் உரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது கட்டமாக 24 குழந்தைகளுக்கு மாநில அரசின் நிவாரண உதவியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 7 குழந்தைகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை பெற்றுத்தர பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago