திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலை அகற்றம் : தர்ணாவில் ஈடுபட்ட சிலை அமைப்பு குழுவினர்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் பேகம்பூர் மதுரை சாலையில் பள்ளி முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் உள்ள பாவேந்தர் கல்விச்சோலை சார்பில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு 500 கிலோ எடையில் வெண்கலச் சிலை செய்யப்பட்டது. இந்தச் சிலையை பொது இடத்தில் வைக்க அனுமதி கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயிலில் நேற்று சிலை நிறுவப்பட்டது. இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்து சிலையை அகற்றும்படி கூறினர். ஆனால் சிலை அமைப்பாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் உரிய அனுமதி பெற்று சிலையை வைப்பதாகக் கூறி சிலையை அகற்றி பள்ளியில் வைத்தனர்.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் சிலை வைக்க பீடம் அமைத்தபோது அதை தடுக்காமல் இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நேற்று போலீ ஸாரின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தனர். பீடம் அமைக்கும்போதே அதைக் கண்காணித்து அகற்றி இருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்