நிலக்கரி சாம்பல் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு - நெய்வேலியில் 5 லாரிகள் தீ வைத்து எரிப்பு : பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிப்பு

By செய்திப்பிரிவு

நெய்வேலியில் நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 5 லாரிகளை தீ வைத்து எரித்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48). இவர், என்எல்சி 2-ம் அனல் மின் நிலையத்தில் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திலகம் (40). கோவிந்தன் நேற்று தன் மனைவியுடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மேலக்குப்பம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2-ம் அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி திலகம் படுகாயமடைந்தார். தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, திலகத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக மேலக்குப்பம் பகுதி மக்கள் ஆத்திரமடைந்து நிலக்கரி சாம்பல் ஏற்றி சென்ற 5 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் அந்த லாரிகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்த நெய்வேலி என்எல்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து லாரிகளின் தீயை அணைத்தனர். ஆனாலும் 5 லாரிகளும் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இந்நிலையில் கோவிந்தனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்எல்சி 2-ம் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சக்தி கணேசன் தலைமையிலான போலீஸார் என்எல்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். அப்பகுதி முழுவதும் பதற்றமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்