ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக வளாகம் முன் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே நிர்வாகம் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை உடனடியாக இயக்குவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் கட்டண சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி பெட்டிகளை இணைக்க வேண்டும். ரயில் நிலையங்களில் லிப்ட், நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். நடைமேடைக் கட்டணத்தை ரூ.50 ஆக உயத்தியதை, ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால், மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத், புறநகர் மாவட்டத் தலைவர் பி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜி.கிரிஜா தலைமை வகித்தார்.
கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் மாலதி தலைமை வகித்தார். இதில், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை கலந்துகொண்டு பேசினார். கந்தர்வக்கோட்டையில் ஒன்றியத் தலைவர் செங்கொடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மாலதி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.சிவப்பிரியா, மாவட்ட துணைத் தலைவர்கள் பி.சங்கிலிமுத்து, ரவி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ராஜன், பி.கிருஷ்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை, கும்பகோணம் ரயில் நிலையங்கள் அருகிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.சந்திரா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எப்.கெரகோரியா, நிர்வாகிகள் வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.முருகானந்தம், எஸ்.ராஜசேகர், எஸ்.சார்லஸ், டி.சசிகுமார், எஸ்.விமலா, எஸ்.வடிவேல் உட்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago