வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி முதல் செப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஆக.31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி தொடங்குகிறது. செப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆண்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை.
வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் ஆக.29-ம் தேதி முதல் செப்.8-ம் தேதி வரை மூடப்படும். திருவிழாவை முன்னிட்டு தற்காலிகக் கடைகள் அமைக்கவும், பிற கடைகள், உணவகங்களைத் திறக்கவும் அனுமதியில்லை.
நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago