தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது : கோவில்பட்டி புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா? :

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. இப்பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. கல்வி நிலையங்களும் அதிகம் உள்ளன. கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட தலைமைஅரசு மருத்துவமனை, செயற்கைபுல்வெளி ஹாக்கி மைதானம்போன்றவை ஏற்கெனவே கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கரநான்குவழிச் சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் கோவில்பட்டி ரயில் நிலையம் 2-வது இடத்தில் உள்ளது. கழுகுமலை, எட்டயபுரம், வைப்பாறு ஆகிய சுற்றுலா தளங்கள் உள்ளன.

கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் என 5 வட்டங்கள் உள்ளன.விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு கோட்டம், புதூரைதலைமையிடமாக கொண்டு வட்டம் அமைத்து, கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கப்படும் என, வாக்குறுதி அளித்தனர். நாளை (13-ம்தேதி) தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கஉள்ளது. இதில், கோவில்பட்டிமாவட்டம் அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, “கோவில்பட்டி அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற நகராகவிளங்குகிறது. இதனால் கோவில்பட்டியை மாவட்டமாக உருவாக்கும்போது அரசுக்கு கூடுதலாக நிதிச் செலவு இருக்காது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சீரமைத்து, கோவில்பட்டி மாவட்டத்தை உருவாக்கலாம். இதேபோல புதூரை தலைமையிடமாக கொண்டு வட்டம், விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்