ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு ரயில்வே எஸ்.பி., தீபாசத்யன் நேற்று வந்தார். அவருக்கு, ரயில்வே காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், ரயில்வே காவல் நிலையத்தில் பல்வேறு ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.பி., தீபாசத்யன் கூறியதாவது, ‘‘ரயில்கள் மூலம் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (சேலம்) தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் குழுவில் 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள், ரயில் மூலம் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 2-வது குழுவில் உதவி ஆய்வாளர் தலைமையில் 20 காவலர்கள் ஈடுபடுவார்கள். இவர்கள், சங்கிலி பறிப்பு, பிக்பாக்கெட், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். 3-வது குழுவில் இடம் பெற்றுள்ள காவலர்கள் ரயில்கள் மூலம் சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இக்குழுவினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள்.
ரயில்வே நிலையங்கள் உள்ள பகுதிகளில் பொது மக்கள் வாகனங்கள் மூலமும் நடந்து செல்லவும் தனி பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் பயணம் செய்வதால் நேரம் அதிகரிக்கும் என்பதாலும், ஆளில்லாத இடங்களில் சிலர் தேவையில் லாமல் தண்டவாளங்களை கடப்பதால் ரயில் விபத்தில் சிக்கி தங்களது இன்னுயிரை இழக்கின்றனர்.
எனவே, ரயிலில் சிக்கி உயிரிழப்பு சம்பவங் களை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, ரயில்வே தண்ட வாளத்தை கடந்து செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றார்.
ரயில்வே காவல்
ஆய்வாளர் பணியிட மாற்றம்
ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மனோகரன் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ரத்தினகுமார் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago