இனி வரும் காலங்களில் - இரண்டு சதுர கி.மீ. பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு : புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

புலிகள் கணக்கெடுப்பு இனி 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடத்தப்படும் என புலிகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல அதிகாரி முரளி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வனத்துறை அரங்கில் தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் தலைமை வகித்தார். தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரி ராஜேந்திர கார்வா முன்னிலை வகித்தார்.

முகாமில், புலிகள் பாதுகாப்பு ஆணைய தென்மண்டல அதிகாரி முரளி பேசும்போது ‘‘தென்னிந்தியாவில் உள்ள காப்பக வனப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, புலிகளின் எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும். புலிகள் கணக்கெடுப்பின்போது ஆணையத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும். 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கணக்கெடுப்பு நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் காலங்களில் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்றார்.

புலிகள் மதிப்பீட்டுக்கான பயிற்சி குறித்து கர்நாடக மாநில கூடுதல் தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் ஜெகத்ராமன், பெரியார் புலிகள் காப்பக கள இயக்குநர் அனூப் உட்பட 15 புலிகள் காப்பக கள இயக்குநர்கள் பேசினர்.

முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, கோவா, ஆந்திரா உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த புலிகள் காப்பக துணை இயக்குநர்கள், வனச்சரகர்கள், பல்லுயிர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 89 பேர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்