வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடம் உள்ளிட்ட வசதிகளின்றி - புத்தக பண்டல்களின் கிடங்காக மாறிய திருப்பூர் நூலகம் :

By இரா.கார்த்திகேயன்

குஜராத்தில் இருந்து பிழைப்பு தேடி திருப்பூர் வந்த விட்டல்தாஸ் சேட் என்ற குஜராத்தியர், பருத்தி விற்பனையில் ஈடுபட்டு வெற்றி கண்டபோது நூலகத்துக்காக தானமாக வழங்கிய இடம் தான், திருப்பூர் பூங்கா சாலையில் ஊரின் அடையாளமாக இருக்கும் மாவட்ட மைய நூலகம். இந்த நூலகம் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2010-ம் ஆண்டு அக்டோபரில் மாவட்ட மைய நூலகமாக மாறியது.23 ஆயிரம் பேர் உறுப்பினர்களும், ஒன்றரை லட்சம் புத்தகங்களும், 250 குறிப்புதவி நூல்களும் உள்ளன. இந்நிலையில், படிக்கவும், அமரவும் இடமின்றி வாசகர்கள் தவித்து வருவதுடன், புதிய புத்தக மூட்டைகளை கிடங்குபோல குவித்துவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் ஆர்.புருஷோத்தமன் கூறும்போது, "புதிய நூல்கள்விநியோகம் செய்ய கூடுதல் கட்டிடம், புதிய நூல் பண்டல்கள் வைப்பதற்கு தனி அறை தேவை. ஒவ்வொரு முறை புதிய நூல்கள் வரும்போதும், வைப்பதற்கு இடமின்றி தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது ஆயிரக்கணக்கான புதிய புத்தக மூட்டைகளை நூலகத்தில்அடுக்கி வைக்க இடமின்றி, படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு மதிய உணவருந்தும் வசதியுடன் கூடிய தனி அறை ஏற்படுத்த வேண்டும்..

குளிர்சாதன வசதியுடன் கணினி அறை, நூலகர் அலுவலக அறை, கீழ்நிலைத்தொட்டி, வாசகர்களுக்கு கழிவறை, ஜெனரேட்டர் அறை புதுப்பித்தல், சுற்றுப்புற மதில் சுவர் புதுப்பித்தல், வாசகர்களின் வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நூலகக் கட்டிடம் முழுவதும் சுத்தம் செய்து வர்ணம் பூச வேண்டும். தரைத் தளம் முழுவதும் ஓடு பதிக்க வேண்டும். கிழிந்த நூல்களை பாதுகாக்கும் வகையில் பைண்டிங் செய்ய வேண்டும்" என்றார்.

கழிப்பறை வேண்டும்

மூத்த வாசகர்கள் சிலர் கூறும்போது, "மாவட்ட மைய நூலகத்தை விரிவுபடுத்தி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நூலகத்துக்கு வரும் வாசகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. ஆனால், மாவட்ட நிர்வாகமோ அல்லது தொடர்புடைய நூலகத் துறையோ கண்டுகொள்வதில்லை. வளாகத்துக்குள் போதிய இடம் இருப்ப தால், நூலகத்தை மேலும் விரிவு படுத்த வேண்டும்.

நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், உடனடியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். வாசிப்பை மேம்படுத்தும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் புத்தகங்கள் வழங்கிவரும் நிலையில், திருப்பூர் நூலகத்தின் நிலையைமாற்ற வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு" என்றனர்.

நிதி கோரப்படும்

மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது," நூலக விரிவாக்கம் தொடர்பாக ஏற்பாடு செய்து வருகிறோம். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பணிகளை தொடங்க முடியவில்லை. நூலகத்துக்கு பின்புறம் நீதிபதிகள் குடியிருப்பு இருப்பதால், அங்கு மேற்கொண்டு கட்டிடம் கட்ட இயலாது. இதனால், கழிப்பிடம்கூட கட்ட முடியவில்லை. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூலகத்துக்கு சொந்தமான 14 சென்ட் இடம் உள்ளது. அதில், புதிய கட்டிடம் மற்றும் தேவையான வசதிகளுடன் நூலகத்தை எழுப்ப அரசிடம் நிதி கோரப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்