கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செல்போனில் கடந்த 6-ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர் கடும் வார்த்தையில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மிரட்டல்விடுத்தவரின் செல்போன் சேலத்தில் இருந்து தொடர்பு கொண்டது தெரிந்தது.
இதையடுத்து, சேலம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இரும்பாலை அடுத்த சித்தனூரில் பலகாரக்கடை நடத்தி வரும் கிருஷ்ணன்மனைவி ராணி (55) என்பவரின் செல்போனில் இருந்து அழைப்பு சென்றது தெரிந்தது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, ராணியின் செல்போன் காணாமல் போனது தெரிந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலின் இருப்பிடத்தை அந்த செல்போன் எண்ணின் டவர்காண்பித்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் மிரட்டல் விடுத்த செல்போனை வைத்திருந்த பிரேம் ராஜ் நாயர் (46) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர், பெங்களூருவில் சிறுவயதிலேயே குடியேறியது தெரியவந்தது. மேலும், அவருக்கு தொழிலில் ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டதால், பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவர் விமானப் படையில் 20 ஆண்டுகளாக பிசியோதெரபிஸ்ட் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் கேரள முதல்வருக்கும் செல்போனில் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கேரள மாநில போலீஸார், பிரேம்ராஜ் நாயரை நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் புறப்பட்டுவருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago