தமிழக அரசின் வெள்ளை அறிக்கையால் லாரி உரிமையாளர்கள் அச்சம் : வரி உயர்த்தும் எண்ணம் இருந்தால் கைவிட கோரிக்கை

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலாளருமான வாங்கிலி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் லாரிகள், டிரெய்லர் லாரிகள், டேங்கர் என சுமார் 12 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. நாள்தோறும் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் அதற்கு ஏற்ப லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை. மேலும், சுங்கக் கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவையும் உயர்த்தப்பட்டன.

கடந்த 17 மாதங்களாக நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான இஎம்ஐ செலுத்த முடியவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 25 சதவீதம் லாரி உரிமையாளர்கள் லாரி தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் லாரிகளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். லாரிகளுக்கான வரியை உயர்த்துவதற்கு அவர் ஏற்பாடுகள் செய்து வருவதாக நாங்கள் அச்சம் கொள்கிறோம்.

லாரித் தொழில் நலிவடைந்து வரும் நிழையில், வரியை உயர்த்தினால் தொழில் பாதிக்கப்பட்டு தொழிலைவிட்டு வெளியேறும் அபாயம் உருவாகும். எனவே, லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE