குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் தென்னை மதிப்புகூட்டு மையம் விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் செண்பகராமன்புதூரில் அமைக்கப்பட்டு வரும் தென்னை மதிப்புக்கூட்டு மையம், புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தென்னை நாற்று பண்ணை ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தென்னை மதிப்பு கூட்டு மையம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த மையத்தில் தென்னை மதிப்பு கூட்டு பொருட்களான இயல்புநிலை தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர், வாகை செக்கு எண்ணெய், தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் வசதி, பொடியை தூளாக்கிகரிக்கட்டிகளாக தயார் செய்யும்இயந்திரம், தேங்காய் சிரட்டைகளை தூள் செய்யும் இயந்திரம், தேங்காய் தொலி உரிக்கும் இயந்திரம் ஆகியவை நிறுவப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கொப்பரையை காயவைக்க உலர் களங்கள் மற்றும் சூரிய ஒளி உலர்த்திகளும் நிறுவப்பட்டு வருகின்றன.
மேலும் தேங்காய்களை சேமித்துவைக்க 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிட்டங்கிகள், ஏல அறை, சிப்பம் கட்டும் அறை, விவசாயிகள் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஓய்வறை,உணவகம், சில்லறை விற்பனைகடைகள், நிர்வாக அலுவலகம்போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் தென்னை மரக்கன்றுகள் உட்பட மாவட்டத்தின் அரியவகை மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்திட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் தென்னை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
வீழ்ச்சியடைந்த விவசாயம்
ராஜாக்கமங்கலம் வட்டம் புத்தளத்தில் சுமார் ஐந்தரை ஏக்கர்பரப்பளவில் தென்னை நாற்றுப்பண்ணை செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கே உரிய பாரம்பரியம் மிக்க மரங்கள், செடிகள் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் அதற்கான முயற்சியை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறாம்.குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மையில் அதிக கவனம் செலுத்தாத காரணத்தால் விவசாயம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே தென்னை, வாழை, ரப்பர், நெல் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, வேளாண்மை துணை இயக்குநர் அவ்வை மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் வட்டம் வழுக்கம்பாறையில் வேளாண் பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிட்டங்கியை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார்.
இந்த மையத்தில் விதைகள், நடவு பொருட்கள், இயற்கை உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகளை சேமித்து வைத்து, உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago