தமிழகம் முழுவதும் கொள்முதல் நிலையங்களில் - முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிப்பு : விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் ந.பெரியசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதை வரவேற்கிறோம். வேளாண் துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்ற வேண்டுமெனில் எஸ்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதலுக்குத் தேவையான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும். பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஆக.23-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினைகளை பட்டியலிட்டு மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு அனுப்ப உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்