மத்திய அரசின் ‘அடல் இன்னொவேஷன் மிஷன்' சார்பில் அறிவியல் படைப்புத் திறனை வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் தேசியஅளவில் ‘அடல் டிங்கரிங் மாரத்தான்' என்ற பெயரில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேசிய அளவில் மொத்தம் 7,000 புதிய படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளி சார்பில் 25 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. தேசிய அளவில் 300 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பத்தாம்வகுப்பு மாணவியர் ஆர்.சிவானி, ஏ.ஆமின் சமிரா, டி.ஹரின்காசி ஆகியோர் இணைந்து படைத்த ‘மாஸ்க் வென்டிங் மெஷின்' மற்றும் ‘ஸ்மார்ட் கார் ஸ்டியரிங்' ஆகிய இரண்டு படைப்புகள் தேர்வுசெய்யப்பட்டன.
‘அடல் ஸ்டூடண்ட் இன்னோவேட்டர் புரோகிராம்' மூலம் இம்மாணவியரின் படைப்புகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், 'மாஸ்க் வென்டிங் மெஷின்' என்ற படைப்பு தமிழக அளவில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
படைப்புகளை உருவாக்கிய மாணவியரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியைகள் த.ஆனந்தி மற்றும் அ.பிரிய தர்ஷினி ஆகியோரையும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி, பள்ளியின் செயலாளர் சு.முரளி கணேசன், இயக்குநர் பிரீத்தி முரளி கணேசன், தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் ஆகியோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago