ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில் வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங் களில் நெல் மகசூலைக் காட்டிலும் அதிகமாகவும், வியாபாரிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக்கழக உயர் அதிகாரிகள் குழுவினர் ஆற்காடு வட்டத்துக்கு உட்பட்ட சிறுகரும்பூர், தத்தாவாடி, கூரம்பாடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்தினர். இதில், புகார்கள் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து, முறைகேடு புகார்கள் தொடர்பாக நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் நாகராஜன் உட்பட துணை மேலாளர் (கணக்கு), 3 கண்காணிப்பாளர்கள் மற்றும் 3 பட்டியல் எழுத்தர்கள் என மொத்தம் 8 பேர் நேற்று முன்தினம் தற்காலிக பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் 79 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரி கள் சிலர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் நெல்லை விற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. மாவட்ட குழுவினர் ஆலோ சனையில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடங்கல் ஆவணங்கள் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கினால் உண்மையான விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆனால், பல இடங்களில் விவசாயிகளுக்கு சம்பந்தம் இல்லாத வகையில் அடங்கல் ஆவணங்கள் இருப்ப தாக புகார் எழுந்துள்ளது. தகுதி இல்லாத நபர்களுக்கு அடங்கல் வழங்கி இருந்தால் அதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
நெமிலி, அரக்கோணம் மற்றும் சோளிங்கர் வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 29 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பாடுபட்டு விளை விக்கும் நெல்லுக்கு அரசு உரிய விலை கொடுத்து உதவி செய்கிறது. விவசாயிகளின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய பணம் தகுதி இல்லாதவர்களுக்கு செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அலுவலர்களிடம் இருந்து உரிய தொகை வசூலிக்கப்படும். விவ சாயிகள் அடங்கல் சான்று கோரினால் முறையாக ஆய்வு செய்து எவ்வளவு நிலத்தில் பயிர் செய்கின்றனர், அதில் பயிர் செய்யாத பரப்பளவு எவ்வளவு என்பதை அடங்கல் ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும். அடங்கல் வழங்கும் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு இருக்கக்கூடாது.
வேளாண் அறிக்கையின்படி ஓர் ஏக்கருக்கு நெல் சாகுபடி 50 முதல் 60 மூட்டைகள் என தெரி விக்கப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்த அளவுக்கு அதிகமாக நெல்லை எடுத்து வந்தால் அதை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வட்டாட்சியர்கள் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவ தாஸ், வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, வட்டாட் சியர்கள் சுமதி, பழனிராஜன், வெற்றிகுமார், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மேலாளர்கள் பிரேமா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago