திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி களில் இயற்கை மலர்கள் பயன்படுத்துவது தொடர்பாக மேடை அலங்காரங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓசூர் மலர் விவசாயிகள் பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரண மாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் உள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் மலர்களால், தமிழகத்தில் மலர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், ஓசூர் மலர் விவசாயிகள், பந்தல் மற்றும்மேடை, மணவறை அலங்காரம் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இயற்கை மலர்கள் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாடு காரணமாக ஆண்டிற்கு ரூ.20 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கும், அரசுக்கு வரியிழப்பும் ஏற்படுகிறது.
திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சீனா பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்திய மலர் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் முதல்கட்டமாக தமிழகத்தில் பந்தல், மேடை, மணவறை அலங்காரத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இயற்கை மலர்கள் மூலம் அலங்காரம் செய்வது குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.
ஓசூரில் மலர்கள் விளைவிக்கப்படும் தோட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அலங்காரம் செய்யும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். தமிழக இளைஞர் களுக்கு மலர் வடிவமைப்பு பயிற்சிகள் அளித்து, அலங்கார பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். பொதுமக்களும் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் செயற்கை மலர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை மலர்களை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு கைக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago