மின்தடை தொடர்பான புகார்கள் மீது அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பர்கூர் எம்எல்ஏ மதியழகன் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மின்வாரிய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.மதியழகன் தலைமையில் நடந்தது. போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜி, ஸ்டாலின், மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மின் வாரியம் சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், புதியதுணை மின் நிலையங்கள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் சிலரும் பங் கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கூறியதாவது: மின் வாரிய அலுவலர்கள் பொதுமக்கள் மின்சார வாரியம் தொடர்பான புகார்களை அளிக்க தொடர்பு கொண்டால் உரிய பதில் அளிப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மின் தடை தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சமங்கலம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்தடை ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், பர்கூர், அச்சமங்கலம், ஜெகதேவி, போச்சம்பள்ளி, பண்ணந்தூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி உள்ளிட்ட பகுதி மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago