மத்திய கடல் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு - நெல்லை, தூத்துக்குடி, குமரியில் மீனவர்கள் போராட்டம் : படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கடலில் இறங்கியும் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'இந்திய கடல் மீன்வள மசோதா- 2021' என்ற மசோதாவை திரும்ப பெறக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 3,500 நாட்டுப்படகுகள், 420 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திரேஸ்புரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் படகு களில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர். தருவைகுளம் பகுதியில் கடலுக்குள் இறங்கி நின்று, கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் முழக்கமிட்டனர்.

மேலும், மாவட்டம் முழுவதிலும் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், விசைப்படகு தொழிலாளர்கள், உரிமையாளர்கள், மீன் ஏலமிடுவோர் என, 500-க்கும்மேற்பட்டோர் திரண்டு ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவர்சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.ஜே.கயாஸ், தூத்துக்குடி அனைத்துவிசைப்படகு உரிமையாளர் சங்கங்களின்ஒருங்கிணைந்த தலைவர் சேவியர் வாஸ்,திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத்தலைவர்ராபர்ட், பரதர் நல தலைமைச் சங்கதலைவர் அந்தோணிசாமி பர்னாந்து, திமுகமாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மீனவர்களிடம் எஸ்பி ஜெயக்குமார்பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் 50 பேர் மட்டும் ஆட்சியர் கி.செந்தில் ராஜை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில், “மத்திய அரசின் கடல் மீன்வளமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துதமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வரை மீனவர்கள் சந்தித்து பேச மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

திருநெல்வேலி

மத்திய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள், நாட்டு படகுகள் அனைத்தும் கரைப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

துறைமுக தங்கு தளங்கள் மற்றும் கரைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றிவைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கோவளம், பள்ளம், குளச்சல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் குடும்பத்துடன் கடற்கரையில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் வடசேரியில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மாவட்ட பொதுச் செயலாளர் அந்தோணி, கிருஷ்ணன்கோயில் கிளை தலைவர் ஜெயம், மீனாட்சிசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் டன்ஸ்டன் தலைமை வகித்தார். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி உட்பட திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE