திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் நேற்று வழக்கம்போல அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வழக்கத்தை விட குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கோயிலில் ஆடி பூரம் விழா இன்று (ஆக.10) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பிறகு ஆடிபூரத்தை முன்னிட்டு விநாயகர் சன்னதி அருகே உள்ள பார்வதி அம்மன், யாகசாலை மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வளைகாப்பு நடத்தப்பட்டு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் பார்வதி அம்மன் மகா மண்டபம் சன்னதி செல்கிறார். அங்கு மற்ற கால பூஜைகள் நடக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்