கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய, வேளாண்மை உதவி அலுவலரிடம் சான்று பெற்று வர வேண்டும். இந்த நடைமுறை நாளை (ஆக.11) முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமலாகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்துக்கு, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 வட்டங்களில் இதுவரை 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விளைவித்து அறுவடை செய்த நெல்லுக்கு அத்தாட்சியாக, கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பமிடப்பட்டு பெறப்பட்ட சிட்டா அடங்கல் பெற்று, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாம் விளைவித்து அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று முழுப் பயன்பெறும் வகையிலும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் போன்றோர் வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை முழுமையாக தடுக்கும் வகையிலும், இனி வரும் காலங்களில் கிராம நிர்வாக அலுவலரால் வழங் கப்படும் அசல் சிட்டா அடங் கலுடன், வேளாண்மை உதவி அலுவலரிடம் நெல் விதைப்பு தேதி, அறுவடை செய்த தேதி, நெல்லின் ரகம் ஆகிய விவரங்களை கொண்ட சான்று பெற்று, நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.
இந்த நடைமுறை நாளை (ஆக.11) முதல் அமலுக்கு வருகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago