திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் - புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனித சங்கிலி :

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 200 நாட்களைக் கடந்தும் போராடி வரும் விவசா யிகளுக்கு ஆதரவாக, வெள்ளை யனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற தினமான ஆக.9-ம் தேதியான நேற்று மனித சங்கிலி போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங் கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, துணைத் தலைவர் கே.நாகராஜன், திருத்துறைப்பூண்டியில் மாவட்ட துணைத் தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், முருகையன், மன்னார்குடியில் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.ஜோசப், துணைத் தலைவர் ஆர்.சதாசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், நீடாமங்கலத்தில் மாவட்டத் தலைவர் ரங்கராஜன், பொருளாளர் கே.ராவணன், கோட்டூரில் மாவட்ட துணைச் செயலாளர் பி.பரந்தாமன், துணைத் தலைவர் பி.சவுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது தொடரப் பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன.

நாகை அவுரித்திடலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு ஆகியவை சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு, அனைத்திந்திய விவசாய தொழி லாளர் சங்க மாநில பொதுச் செய லாளர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் ஆத்துப்பாலம் முதல் ரயிலடி வரை மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு ராஜாராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாதர் சங்க நிர்வாகி கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதேபோல, ஆவுடையார் கோவிலிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்