கீழ்ப் பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் காவிரியில் - புதிய நீர்ப் பாசன திட்டங்களுக்கு அனுமதி கூடாது : பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கீழ்ப் பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் காவிரியில் புதிய நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியில் ராஜா வாய்க்காலில் 42 புதிய நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை நீர் வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று திரண்டனர்.

அலுவலக வளாக பிரதான நுழைவுவாயில் முன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: இந்த புதிய நீர்ப்பாசன திட்டங்க ளால், டெல்டாவில் கீழ்ப் பாசன விவசாயிகளின் உரிமை பறிபோகும். இறவைப் பாசன திட்டம் என்ற பெயரில் டெல்டா வில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய, மிகப் பெரிய வணிக நோக்கிலான, காவிரிக் கரைகளில் புதிதாக கொடுக்கப் பட்டுள்ள 42 நீர்ப் பாசன திட்டங் களுக்கான அனுமதிகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும்.

கீழ்ப் பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் காவிரியில் புதிய நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. 42 நீர்ப் பாசன திட்டங்களுக்கான அனுமதிகளையும் அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, அடுத்த கட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.

மேகேதாட்டுவுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய போராட்டத்தால் மேகேதாட்டு அணைக்கு தடை ஏற்படாது. ஆனால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்படும். தமிழர்கள் அகதிகளாக விரட்டப்படுவர். இவ்வாறு நேரிட்டால் பாஜகதான் முழுப் பொறுப்பு என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்