தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை அறிக்கை தாக்கல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தமிழக முதன்மைச் செயலாளரும் கடந்த 2018 செப்டம்பரில் தாக்கல் செய்ததன் அடிப்படையில், கடந்த 2018 அக்டோபரில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஹென்றி டிபேன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை மற்றும் தமிழக முதன்மை செயலர் அறிக்கை இரண்டையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல தமிழக பொதுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், ஆயிரத்து 126 ஆவணங்களை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை முதல் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் போராட்டக்காரர்களுக்கு எதிரான 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 84 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் செப்.13-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்