சாலை அமைக்கும் பணிகளை தடுக்க நினைக்கும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கிராம மக்கள் பயன்பாட்டுக்காக சாலை பணிகளை விரைவாக முடித்து தர வேண்டும் என திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று மனு அளிக்கப் பட்டுள்ளது.
தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் தனபால், ராஜா, மாணிக்கவாசகம், வெங்கடேசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப் பதாவது, "திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலகுப்பம் ஊராட்சி சாமுடி வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விவசாய பொருட்களை சந்தைப்படுத்த வெளியூர்களுக்கு கொண்டு செல்ல சாமுடி வட்டத்தில் சரியான சாலை வசதியில்லை. எனவே, சாமுடி வட்டத்தில் தார்ச்சாலை அமைத்துத் தரவேண்டும் என நீண்ட நாட்களாக கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இச்சாலை பணிக்காக அப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் உள்ள மண்ணை சாலைப்பணிக்காக வழங்கினர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத சிலர் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி, விவசாய பட்டா நிலத்தில் இருந்து மண் வெட்டி எடுப்பதாக வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்து அரசு அதிகாரிகள் மூலம் கிராம மக்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இது தவிர உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் இரு பிரிவுகளாக பிரிந்து சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இதனால், சாமுடி வட்ட மக்களின் பல ஆண்டு கனவு, கானல் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, கிராமமக்களின் தேவையை அறிந்து மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சாமுடி வட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் சாலை அமைத்து தரவேண்டும். இப்பணிக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஆம்பூர் வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago