ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.77 லட்சம் மதிப்பிலான சுமார் 17,400 லிட்டர் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த தனிப்படை காவலர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டி னார். மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளியான காஞ்சிபுரம் காமராஜ் என்பவரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் இருந்து சென்ன சமுத்திரம் வழியாக செல்லும் சாலையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனர். வாகனத்தில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினர். அந்த வாகனத்தில் 100 கேன்களில் 3,500 லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தர வின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன், துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி (கலவை), காண்டீபன் (ஆற்காடு கிராமியம்), யுவராணி (கலால்) உள்ளிட்ட 7 தனிப்படைகளை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சம்பத் மற்றும் கலவை செய்யாத்துவண்ணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர். மேலும், வினோத் மேற்பார்வையில் பதுக்கி வைத்திருந்த 397 கேன்களில் 13,895 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரக்கு வாகனத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான எரிசாராய கேன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிடிபட்ட எரிசாராய கேன்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பார்வையிட்டதுடன், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய அளவில் எரிசாராயம் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 497 கேன்களில் 17,395 லிட்டர் பறிமுதல் செய்ததுடன் இதன் சந்தை மதிப்பு ரூ.77 லட்சமாகும். இந்த ஆண்டில் இது பெரிய பறிமுதல் ஆகும்.
இதுதொடர்பாக இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களில் 1.18 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இப்போது, டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டதால் போலி மதுபானம் தயாரிப்பு குறைந் துள்ளது’’ என்றார்.
அப்போது, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, காவல் கண்காணிப் பாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய் (ராணிப்பேட்டை), பெருமாள் (கலால்), சுப்புலட்சுமி (கலால் புலனாய்வு பிரிவு), கலால் ஏடிஎஸ்பி பெருமாள் கண்ணன், கலால் புலனாய்வு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
‘கிங்-பின்’ காஞ்சிபுரம் காமராஜ்
எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய புள்ளி காஞ்சிபுரம் காமராஜ் என தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புளியரம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் எரிசாராயம் கேட்டு காமராஜியிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ.28 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.இதற்கிடையில், விஜயகுமாரை செய்யாறு கலால் பிரிவு காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் உள்ள விஜயகுமாரை அவரது தம்பி சந்தியாகுமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். எரிசாராய சப்ளை குறித்து தனது நண்பரான சம்பத் உதவியுடன் காமராஜியிடம் பேசி கொடுத்த பணத்துக்கு சரக்கை வாங்கவும் இல்லாவிட்டால் பணத்தை வாங்கு மாறு கூறியுள்ளார்.
அதன்படி, காமராஜியிடம் பேசியபோது எரிசாராயத்தை சப்ளை செய்வதாக கூறியுள்ளார். திட்டமிட்டபடி வந்த எரிசாராய கேன்களை சம்பத் தனது நண்பர் சேட்டு என்பவர் உதவியுடன் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே 397 கேன்களில் வந்த எரிசாராயத்தை வினோத் உதவியுடன் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துள்ளார். கடைசி லோடாக வந்த 100 கேன்கள் கலவை காவல் துறையினரிடம் சிக்கியதால் மொத்த கும்பல் குறித்த தகவல் வெளியே வந்துள்ளது.
கலால் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் இந்த வழக்கின் ‘கிங்-பின்’ நபரான காஞ்சி புரம் காமராஜ் என்ற நபர் யார்? என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். அவர் குறித்த தகவல் மர்மமாக இருப்பதால் அவரை பிடிக்க தனியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக மது விலக்கு குற்றபுலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago