திருப்பூரில் கரோனா ஊரடங்கை பயன்படுத்தி மாலை 5 மணிக்கு மேல் அதிக விலைக்கு மது விற்க மதுபாட்டில்கள் கேட்டு, மதுபானக் கூட ஊழியர்கள் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கரோனா தொற்று பரவலால், திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல்மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் 5 மணிக்கு மேல் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறும்போது, "டாஸ்மாக் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் நகரங்களில் திருப்பூரும் ஒன்று. கரோனா தொற்று பரவும் நேரம் என்பதால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில், சிலஇடங்களில் மாலை 5 மணிக்கு மேல் மதுபாட்டில்களை பதுக்கி விற்பதாக புகார்கள் வருகின்றன.
அதேபோல, மதுபானக் கூடங்களிலும் பதுக்கி விற்கவும் முயற்சி செய்கின்றனர். மதுபானக்கூடங்களை குத்தகை எடுத்தவர்களின் காலம் தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதால், பலர் வருவாய் இல்லாத நிலையில் இப்படி செய்ய முயன்றுள்ளனர். இதனால் மாலை 5 மணிக்கு மேல் மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்க முயல்கின்றனர். சில இடங்களில் மதுபானக் கூட ஊழியர்கள் மூலமாக மிரட்டி, டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை பெறுவதால், தற்போது டாஸ்மாக் ஊழியர்கள் அச்சத்திலும், மன உளைச்சலிலும் இருக்கின்றனர்" என்றனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "கரோனா ஊரடங்கை காரணம்காட்டி, பல்லடம் மற்றும் வளர்மதி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படவில்லை. இந்நிலையில், சில இடங்களில் முறைகேடாக மதுபானக் கூடங்கள் இயங்குவதாக புகார்கள் வருகின்றன. 8 இடங்களில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சில இடங்களில் மதுபானக் கூட ஊழியர்களை வைத்துக்கொண்டு, டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்களை பதுக்குவதாக புகார்கள் வருகின்றன. விரைவில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago