ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பல்வேறு கோலங்களில் எழுந் தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை விழா 10-ம் நாளான நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், பின்னர் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை களும் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெற்றன. இதில், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11-ம் நாள் திருவிழாவான இன்று (ஆக.9) அதிகாலை 5 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சார்த்தி தரிசனமும், பின்னர் பச்சை சார்த்தி அபிஷேகமும், தரிசனமும் நடைபெறுகிறது.

நாளை (ஆக.10) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவு சுவாமி ஆலிலை சயனம் மற்றும் மங்கள தரிசனமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப் பாண்டியன் செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்